பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்.
பல்லவர் வரலாறு என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. நாளிதுவரை வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து நாட்டின்கண் மறைந்து கிடக்கும் பல சான்றுகளைக் கண்டுபிடித்துப் பல இலக்கியங்களிற் கண்ட குறிப்புகளைத் தெரிந்தெடுத்து அவற்றை ஒழுங்குபடத் தொகுத்துத் தமிழ்நாட்டிற்கு ஒர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவார்போல் அல்லாது, உண்மைச் சான்றுகளை அறியவேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குப்படுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும். இதனைப் போலவே மற்றத் தமிழ் அரசர் பரம்பரைகளுக்கும் தமிழ் நாடுகளுக்கும் வரலாற்று நூல்கள் வெளிவருவது ஒரு சிறந்த முறையாகும். அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் கழகத்தார் அருஞ்செயலும் போற்றத் தக்கதே.
பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள்வரை தமிழ்நாட்டில் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும், அவர்களுடைய பண்டைக்குலம் இன்னவென்று உறுதியாகக் கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த அயலவர்கள் என்றும், ஈழநாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பலவழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலைநின்று கொண்டிருந்தது. அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில், எந்தக்குலம் அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டு போகப் பட்டது.
இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ! அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு, அங்கங்கே சென்று அவற்றைப் பெருமிதத்துடன் நோக்குவார்களாக.